business

img

மோடி அரசு வசூலித்த கலால் வரி மட்டும் ரூ. 19 லட்சம் கோடி.... பெட்ரோல் - டீசலை வைத்து 73 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மக்களிடம் கொள்ளை.... காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றச்சாட்டு....

புதுதில்லி:
சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வைக் காரணம் காட்டி எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் பெட்ரோல் - டீசல் விலையை உயர்த்தி வருகின்றன.கடந்த ஜனவரி 6, 7 ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் பெட்ரோல்விலை லிட்டருக்கு 45 காசுகளும், டீசல் விலை 51 காசுகளும் உயர்த்தப்பட்டது. சென்னையில் தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு 86 ரூபாய் 96 காசுகளாகவும், டீசல் விலை 79 ரூபாய் 72 காசுகளாகவும் உயர்ந்துள்ளது. 

இதுவே மும்பை போன்ற இடங்களில் பெட்ரோல் விலை 90 ரூபாயையும் டீசல் விலை 81 ரூபாயையும் தாண்டி விட்டது. அங்கு பெட்ரோல் விலை 90 ரூபாய்83 காசுகள், டீசல் விலை 81 ரூபாய் 07 காசுகள் என்று விற்கப்படுகிறது.கொரோனா பொதுமுடக்கக் காலத்தில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 15 டாலருக்கு கீழே சரிந்தபோதும், இந்தியாவில் மட்டும் பெட்ரோல் - டீசல் விலை குறையவில்லை. மாறாக, பெட்ரோலுக்கு லிட்டருக்குரூ. 17-ம், டீசலுக்கு ரூ. 16-ம் வரிகளை உயர்த்தி, மக்களுக்கு செல்லவேண்டிய பலனை மோடி அரசு தடுத்தது. இதன்மூலம் கடந்த மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் மட்டும்மோடி அரசு ரூ. 1 லட்சத்து 60 ஆயிரம் கூடுதல் வரி வருவாய் ஈட்டியது. தற்போது 2021 புத்தாண்டிலும் பெட்ரோல் - டீசல் விலைகளை உயர்த்தத் துவங்கியுள்ளது.

இந்நிலையில்தான், இந்தியாவில் கடந்த 73 ஆண்டுகளில் இல்லாதஅளவுக்கு பெட்ரோல் - டீசல் விலைஉயர்ந்துள்ளது என்றும் மோடி ஆட்சிக்கு வந்த கடந்த ஆறரை ஆண்டுகளில் மட்டும் பெட்ரோல் - டீசல் மீது ரூ. 19 லட்சம் கோடி அளவிற்கு கலால் வரி (Excise Duty) விதித்திருப்பதாகவும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.‘’மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான அரசு, கொரோனா வினால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பையும், நாட்டில் நிலவும் பேரிடரான சூழலையும்கூட வாய்ப்பாகப் பயன்படுத்தி, தனது கஜானாவை நிரப்பிக்கொள்ள நினைக்கிறது.ஒருபுறம் தேசத்துக்கு உணவு வழங்கும் விவசாயிகள் தங்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 44 நாட்களாக தில்லியின் எல்லைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மறுபுறத்தில், சர்வாதிகாரப் போக்கு கொண்ட, கருணையோ இரக்கமோ இல்லாத பாஜக அரசு, ஏழை மக்களின், நடுத்தர மக்களின் முதுகெலும்பை உடைப்பதில் பரபரப்பாக இருக்கிறது.

கடந்த ஆறரை ஆண்டுகளில் மோடி அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை (ExciseDuty) உயர்த்தியதன் மூலம் மட்டும்ரூ. 19 லட்சம் கோடியை ஈட்டி யுள்ளது. இன்று பெட்ரோலியக் கச்சா எண்ணெய் விலை பேரல் 50.96 டாலராகத்தான் இருக்கிறது. அதாவது லிட்டர் ரூ. 23 ரூபாய் 43 காசுகள் என்ற அளவில் உள்ளது. ஆனால், இவ்வளவு குறைந்தபோதிலும்கூட, பெட்ரோல் - டீசல் விலை கடந்த 73 ஆண்டுகளில்  இல்லாத அதிகபட்ச விலைக்கு விற்கப்படுகிறது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்தாலும், மக்களுக்கு நன்மை கிடைப்பதற்குப் பதிலாக கலால் வரியை உயர்த்தி லாபம் ஈட்டுவதிலேயே மத்திய அரசு நோக்கமாக இருக்கிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலையையும் மோடி அரசு உயர்த்தி யிருப்பது, ஒவ்வொரு வீட்டின் பட்ஜெட்டையும் பாதிக்கிறது.சுதந்திரமடைந்ததில் இருந்து முதல் முறையாக முக்கியமான முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாடு இருக்கிறது” என்று சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

;